பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அங்கு ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)’ மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை, வாக்காளர் உரிமையை பறிக்கும் முயற்சியாகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பெரும் சர்ச்சையாக மாறியது. காங்கிரஸ் கூட்டணியும், ஆர்ஜேடியும் உள்பட பல எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘SIR’ எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிராக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“‘SIR’ எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையை பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கனவே பீகாரில் நடந்ததை நாம் கண்டோம்.
தமிழ்நாட்டின் காவலுக்காக கருப்பு–சிவப்பு வீரர்கள் விழிப்புடன் நிற்க வேண்டிய நேரம் இது.
வருகிற அக்டோபர் 28, 2025, மாமல்லபுரத்தில் நடைபெறும் ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தில் அனைவரையும் சந்திக்க உள்ளேன்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உழைப்பை விதைத்தால்தான் மாநில வெற்றியை அறுவடை செய்ய முடியும். வார்டு முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் தங்களது வாக்குச்சாவடியில் வெற்றி பெறச் செயற்படுவோம். ஏழாவது முறையாக கழக ஆட்சியை உருவாக்குவோம்!”
என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.












Leave a Reply