நயினார், வானதி, அண்ணாமலை, எல். முருகன் ஆகியோருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாதது – காரணம் என்ன?

கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எதுவும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில், முன்பு பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எந்தவையும் இம்முறை இடம்பெறவில்லை.

யார் எந்த தொகுதி?
கடந்த தேர்தலில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதியும் இம்முறை பாஜகவுக்கு வழங்கப்படவில்லை.

அதேபோல், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாமலை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார். 2026 தேர்தலில் அவர் சிங்காநல்லூரில் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியானபோதிலும், அரவக்குறிச்சி மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரு தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

கோவை தெற்கு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான வானதி சீனிவாசனின் தொகுதியும் இம்முறை பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கோவை வடக்கு தொகுதியை பாஜக பெற்றுள்ளது.

முன்னாள் மாநிலத் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

மேலும், தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னர் போட்டியிட்ட வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளும் இம்முறை பாஜகவுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்தும் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தொகுதி மாற்றி போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வானதி கோவை தெற்கு மற்றும் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

மேலும், அண்ணாமலை தாம் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். எல். முருகன் தேசிய அரசியலில் மத்திய இணை அமைச்சராக இருப்பதால், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் நிற்க விருப்பம் இல்லையென பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *