அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திருடப்பட்ட மொபைல்களைக் கண்டுபிடிப்பதிலும், சைபர் குற்றங்களை தடுப்பதிலும் இது உதவும் என தொலைத்தொடர்பு துறை விளக்கியுள்ளது. ஆனால், இந்த செயலியை அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களை கண்காணிக்க பயன்படுத்தும் திட்டம்தான் அரசுக்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் விவாதத்துக்கு வழிவகுத்தது.
2025 ஆம் ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் சஞ்சார் சாத்தி தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. மக்களின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாகவும், போதுமான பாதுகாப்பு வசதி அளிக்காத செயலியாகவும் இது இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்தியா முழுவதும் விற்கப்படும் மொபைல்களில் பணியகத்திலேயே இந்த செயலி ஏற்கனவே நிறுவப்படும். நிதி மோசடிகள், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக வரும் தீங்கான லிங்குகள் போன்றவற்றை அடையாளம் காண உதவும். ஒரே நபர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதையும் சரிபார்க்க முடியும்.
அழைப்புகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், போலியான கேஒய்சி புதுப்பிப்பு அழைப்புகளை தடுத்து நிறுத்தவும், திருடப்பட்ட போன்களை ஐஎம்இஐ எண் மூலமாக முடக்கவும் இந்த செயலி பயன்படுத்தப்படும் என தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
21 மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியை, மொபைல் உற்பத்தியாளர்கள் நீக்க முடியாத வகையில் முன்பே நிறுவ வேண்டும் என நவம்பர் 28, 2025 அன்று மத்திய அரசு அறிவித்தது. இதை 120 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை அடுத்து, பயனர்களின் அழைப்பு அல்லது தனிப்பட்ட தரவுகளை சஞ்சார் சாத்தி சேமிப்பதில்லை என்றும் விரும்பினால் அதனை மொபைலிலிருந்து அகற்றவும் முடியும் என்றும் சிந்தியா மக்களவையில் தெளிவுபடுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.











Leave a Reply