நாகை–சென்னை கடற்கரைக்கு கனமழை அலர்ட்: பிரதீப் ஜான் 99% நிச்சயம் என தகவல்
இலங்கை அருகேயுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வழியாக சென்னை வரையிலான பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த மழைச்சூழலை 99% உறுதியாகக் கூறியிருப்பதாக, தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் இன்று அதிகாலை (நவம்பர் 27) தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் முதல் சென்னை வரை உள்ள கடற்கரைப் பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட் மண்டலங்கள்’ என குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகள் அதிக தாக்கத்திற்கான நாட்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மேலும், வானிலை அமைப்பு மெதுவாக நகர்ந்தால், தாக்கம் டிசம்பர் 1 வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தற்போது நவம்பர் மாத மழைப்பொழிவில் மிகப் பெரிய பின்தங்கலை சந்தித்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் சாதாரணமாக 375 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், இப்போது வரை 74 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. மீனம்பாக்கத்திலும் இதே நிலையே நிலவுகிறது — 66 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது.
இந்நிலையில் உருவாகியுள்ள சுழற்சியே, இந்த மாத இறுதிக்குள் சென்னையின் மழை அளவை குறைந்தபட்சம் ஈடுகட்டும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் டெல்டா முதல் சென்னை வரையிலான மக்கள், அடுத்த சில நாட்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.











Leave a Reply