நாட்டின் செல்வம் சிலரின் வசம் – பீகார் பிரசாரத்தில் ராகுல் பாஜக மீது தாக்கு

90% மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் முக்கிய நிறுவனங்கள், நீதித்துறை, அதிகார வர்க்கம் மற்றும் ஆயுதப்படைகளில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் உள்ளதாக கடும் குற்றம் சாட்டினார்.

குடும்பா தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நாட்டின் மக்கள்தொகையில் 90% பேர் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்; ஆனால் 10% பேர் மட்டுமே அனைத்து நிறுவனங்களையும், வங்கிப் பணத்தையும், அதிகார வர்க்கத்தையும் கட்டுப்படுத்துகின்றனர்” என்றார்.

அவர் மேலும், “இந்தியாவின் எதிர்காலம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். 90% மக்களுக்கும் இடம் உண்டு, சகோதரத்துவம் நிலவும் நாடு வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி போலிப் பட்டம் கொண்டவர் என்பதால் கல்வி மீது அலட்சியம் காட்டுகிறார் என்றும், நிதிஷ் குமார் மக்கள் தொழிலாளர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார். மேலும், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் நாளந்தா பல்கலைக்கழகத்தை உலகின் சிறந்த பல்கலைக்கழகமாக மாற்றுவோம் என்றார்.

அவுரங்காபாத்தில் நடந்த பேரணியில், “மோடி இளைஞர்களை சமூக ஊடகப் போதையில் ஆழ்த்தி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்புகிறார்,” என்றார்.

அத்துடன், பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்பதால், மோடியும் அமித் ஷாவும் “வாக்குத் திருட்டு செய்யத் திட்டமிட்டு உள்ளனர்” என்றும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.300, கோதுமைக்கு ரூ.400 போனஸ் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் தலைவர்களுக்கு மக்கள் பிரதிநிதி அந்தஸ்து வழங்கப்படும் என்றார்.

பீகார் சட்டமன்றத்தின் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *