பீகார் சட்டசபையின் 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், முதல் கட்டமாக 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 122 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதுடன், அதே நாளில் முடிவுகளும் அறிவிக்கப்படும். பீகார் மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடியே 92 லட்சம் ஆண்களும், 3 கோடியே 50 லட்சம் பெண்களும் அடங்குவர். தேர்தலை முன்னிட்டு மொத்தம் 90,712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 77,000 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுதோறும் சென்று வாக்காளர் விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த மாதம் பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதேபோன்ற திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது












Leave a Reply