இதுதான் தவெகவின் அடையாளம்..! அமைதியாகவே லாக் செய்த விஜய்..! எந்த சத்தமுமில்லாமல் நிகழ்வுகளை நடத்தும் தவெக..!

கரூர் நிகழ்வுக்குப் பிறகு தவெக கட்சி முழுவதுமாக நின்று போய்விட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், எந்த சத்தமுமில்லாமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறார் தவெக தலைவர் விஜய். தவெக இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதன் பின்னணி வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தேர்தல் நெருங்கியுள்ளதால், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற விஜய் தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறார்.

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது, தவெக நடவடிக்கைகளுக்கு தற்காலிக இடைநிறுத்தத்தை ஏற்படுத்தியது. இப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மீண்டும் சுற்றுப்பயணத்தைத் தொடங்க விஜய் முடிவு செய்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சிக்கான சின்னத் தேர்விலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

தேர்தல் ஆணையம் தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கான பொதுச் சின்னங்களுக்கான விண்ணப்பத் தேதிகளை அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் அல்லது வெற்றியைப் பெறும் போது தான் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறும். அதேபோல், திமுகவின் “உதயசூரியன்”, அதிமுகவின் “இரட்டை இலை”, விசிக, நாதக போன்ற கட்சிகளின் நிரந்தர சின்னங்களும் அப்படி கிடைத்தவை.

கரூர் சம்பவத்தை காரணம் காட்டி, தவெக அங்கீகாரம் ரத்து செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, “தவெக இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல” என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இது பெரும் சர்ச்சையாகியிருந்தாலும், தேர்தலை இன்னும் சந்திக்காத கட்சிக்கு அங்கீகாரம் வழங்க முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு.

தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சிகள் நவம்பர் 11 முதல் பொதுச் சின்னங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 184 சின்னங்களின் பட்டியலில் இருந்து கட்சிகள் 5–10 சின்னங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

அந்தப் பட்டியலில் இருந்து இளைஞர்களையும் பெண்களையும் கவரும் வகையில் கப்பல், விசில், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 12 அன்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கத் தயார் நிலையில் தவெக இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த கட்டமாக, மக்களுடன் மீண்டும் நேரடி சந்திப்பு, நிர்வாகிகள் நியமனம், மற்றும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

-Arulkumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *